தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு.

Update: 2021-08-22 20:04 GMT
சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு மீண்டும் தளர்வுகளுடன் வணிகர்களுக்கு சலுகைகள் அளித்து, எங்களுடைய கோரிக்கையை ஏற்று அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதித்திருப்பது மகிழ்ச்சிக்கும், வரவேற்புக்கும் உரியதாகும்.

குறிப்பாக தியேட்டர்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்து, ஊரடங்கை நீட்டித்திருப்பதை மனமுவந்து வரவேற்கிறோம். சுற்றுலா தலங்கள், குறிப்பாக குற்றாலம் போன்ற மருத்துவ குணம் நிறைந்த அருவிகளில் குளிப்பதற்கும் அனுமதி அளிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு, குற்றாலம் போன்ற சுற்றுலாதல மையங்களில் உள்ள வணிகமும், வணிகர்களின் வாழ்வாதாரமும், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

இதனை கருத்தில் கொண்டு, சுற்றுலா தலங்களையும், கோவில் போன்ற புனித தலங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு அனுமதி அளித்து, அந்த துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு பாதுகாத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில் தியேட்டர்கள், அரசு அனுமதித்துள்ள 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே திறந்து செயல்படவும், வணிகர்களும் அரசின் வழிகாட்டுதல்களையும் அவசியம் பின்பற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெச்சரிகையாக எடுத்து, பெருந்தொற்றிலிருந்து தங்களையும், பொதுமக்களையும் பாதுகாத்திட அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்