சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

சட்டசபை கூட்டம் நடந்து வரும் கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-08 23:52 GMT
சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு ஒருவர் கலைவாணர் அரங்க வளாகத்திற்குள் நுழைந்தார். அவர் முதல் ‘கேட்’ பாதுகாப்பை கடந்து 2-வது ‘கேட்’ பத்திரிகையாளர் அறை அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கூறினர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது திடீரென அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து, அதில் உள்ள மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் வேகமாக ஓடிவந்து அவரை பிடித்தனர். அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்ததுடன், அவர் மீது தண்ணீர் ஊற்றி, தீக்குளிக்கும் முயற்சியை தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.

தஞ்சையை சேர்ந்தவர்

அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஆறுமுகம் என்பதும், தஞ்சையைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

அவர் அந்த பகுதியில் உள்ள கேபிள் டி.வி.யில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்