சென்னையில் பயங்கரம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு இளம்பெண் படுகொலை

நடத்தையில் சந்தேகப்பட்டு அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-17 22:04 GMT
சென்னை,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிராண்டிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் கனிமொழி (20). இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சுப்பிரமணிக்கும், கனிமொழிக்கும் 15 வயது வித்தியாசம் இருந்தது. இந்த வயது வித்தியாசம் இவர்களது இல்லற வாழ்க்கையிலும் புயலை உண்டாக்கியது. சுப்பிரமணி, மனைவி கனிமொழியின் நடவடிக்கைகளில் எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.

கனிமொழி ஐஸ்-அவுஸ் பகுதியில் உள்ள தனது தாயார் நிர்மலா வீட்டுக்கு வந்து வாழ்ந்தார். சுப்பிரமணியும் சென்னை வடபழனிக்கு வந்து கொத்தனார் வேலை செய்து பிழைத்து வந்தார்.

சேர்ந்து வாழ மறுப்பு..

சுப்பிரமணி தான் வேலை செய்த கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே வாழ்ந்தார். மனைவி கனிமொழியை தன்னோடு வந்து வாழ்க்கை நடத்தும்படி அடிக்கடி சுப்பிரமணி வற்புறுத்தி வந்தார். தனியாக வீடு வாடகைக்கு எடுத்தால் சேர்ந்து வாழ்வதாக கனிமொழி தெரிவித்தார்.

ஆனால் சுப்பிரமணி வீடு எதையும் வாடகைக்கு எடுக்கவில்லை. இதனால் அவருடன் சேர்ந்து வாழ கனிமொழி மறுத்ததாக தெரிகிறது.

படுகொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கனிமொழி அவரது தாயார் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, கனிமொழியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் கனிமொழி பரிதாபமாக இறந்து போனார்.

இது தொடர்பாக ஐஸ்-அவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சரவணன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம், ஐஸ்-அவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்