கடலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படுகின்றன எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

Update: 2021-09-19 22:16 GMT
சென்னை,

தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

அதாவது, டோக்கன் வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளைவிட்டுள்ளதாகவும் செய்திகள் வருவதாக தெரிவித்துள்ளார்.

கொள்முதல் நிலையங்கள்

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாக்கு இல்லை என்றும், நெல் வைப்பதற்கு இடமில்லை என்றும், திட்டக்குடி வட்டத்தில் தர்மகுடிக்காடு, கொட்டாரம், போத்திரமங்களம், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் ஆகிய ஊர்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்றும், கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை என்றும் கூறி உள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் அவர் தெரிவித்துள்ள 6 ஊர்களில் 5 ஊர்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

போத்திரமங்களத்தில் மட்டுமே 14.6.2021 அன்று முதல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு 2020-2021 பருவத்தில் 1091.53 டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தார்ப்பாய்கள்

கடலூர் மாவட்டத்தில் 2020- 2021 பருவத்தில் இதுவரை 62 லட்சத்து 70 ஆயிரத்து 400 சாக்குகள் கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 3 லட்சத்து 51 ஆயிரம் சாக்குகள் கையிருப்பில் உள்ளன. நெல்லை பாதுகாப்பாக வைத்திட ஆயிரத்து 100 தார்ப்பாய்கள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 38 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு 35 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் அறுவடை முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் உண்மையைத் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

நேரடியாக தெரிவிக்கலாம்

எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டுமல்ல, தொடர்புடைய அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள், நெல் கொள்முதல் தொடர்பாக ஏதேனும் குறைபாடு இருந்தால் அப்பகுதியின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், மண்டல மேலாளர், கலெக்டர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் அல்லது என்னைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். எந்தக் குறையானாலும் உடனடியாக நிவர்த்தி செய்ய ஆயத்தமாக உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்