ரவுடிகளை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது மகிழ்ச்சி; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு

ரவுடிகளை ஒடுக்க ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக தமிழக அரசை பாராட்டுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2021-09-28 19:38 GMT
ரவுடிகள் மோதல்
சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலில் ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேலு என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி (ஓய்வு) என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடி கும்பல்கள், கூலிக்கு கொலை செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை, இந்த கும்பல்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள கொலைகள், இக்கும்பல்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது உள்பட பல கேள்விகளை கேட்டு, அதற்கு பதில் அளிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

புதிய சட்டம்
அதற்கு டி.ஜி.பி. பதில்மனு தாக்கல் செய்தார். அதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். கடந்த மாதம் நீதிபதி கிருபாகரன் ஓய்வுபெறும்போது, இந்த வழக்கின் தீர்ப்பை இரு நீதிபதிகளும் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மராட்டியம், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ரவுடிகளை ஒடுக்குவதற்கு சட்டம் இயற்றியுள்ளது போல, தமிழ்நாடு அரசும் ரவுடிகள், சமூகவிரோதிகளை ஒடுக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும். இதன்மூலம் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தோம்.தற்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ரவுடிகளை ஒடுக்க தமிழக அரசு ‘ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு சட்டம்' என்ற புதிய சட்ட மசோதாவை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளது என்று கூறினார்.

மகிழ்ச்சி
தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அரசை பாராட்டுகிறோம். இந்த புதிய சட்டம் விரைவாக அமலுக்கு வரும்போது, சமூக விரோதிகளுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்