தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-02 21:20 GMT
சென்னை,

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்விற்கான ஆணை வழங்குதல் மற்றும் 2021-2022-ம் ஆண்டிற்கான பல்மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊதிய உயர்வு அரசாணையை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பல்மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிசெய்து வருவோர்களுக்கு ஊதிய உயர்வாக 28 ஆயிரத்து 100 பேருக்கு ஆணை வழங்கியதால் ரூ.89 கோடி அரசுக்கு ஆண்டிற்கு கூடுதல் செலவாகிறது. மத்திய அரசு தரவுகளின் படி தமிழகத்தில் 18 வயது நிரம்பிய தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் உள்ளனர்.

அவர்களில் 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் அவர்களில் 10 லட்சம் பேர் 2-ம் தவணை செலுத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1 கோடியே 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். இன்று (3-ந் தேதி) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

2021-2022-ம் ஆண்டிற்கான பல்மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 358 இடங்களில் தனியார் கல்லூரியில் 296 இடங்களும், அரசு கல்லூரியில் 62 இடங்களும் உள்ளது. அதற்காக 1,018 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதில் 964 தகுதியானவை என கண்டறியப்பட்டது. அதற்கான கலந்தாய்வு நாளை (இன்று) தொடங்கி நடைபெறும்.

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 புதிய மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறையை திங்கட்கிழமை நேரில் சந்தித்து தேவையான ஆவணங்களை வழங்க உள்ளோம்.

பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 100 மருத்துவ இடங்கள் வழங்கியுள்ளதை 150 இடங்களாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்