ஆட்கொல்லி புலி: தோல்வியுறும் நிலையில், சுட்டுப்பிடிக்க உத்தரவு

மசினகுடியில் புலி தாக்கி இறந்த பசுவன் குடும்பத்தில் ஒருவருக்கு வனத்துறையில் வேலை வழங்கபடும் என அமைச்சர் ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.

Update: 2021-10-03 10:08 GMT
சென்னை,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவர் புலி தாக்கி உயிரிழந்தார். அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு 5 இடங்களில் குண்டு வைத்தனர். புலி வேகமாக ஓடி புதரில் மறைந்து விட்டதால் மயக்க ஊசி செலுத்த அவகாசம் கிடைக்கவில்லை. அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து புலியை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை ஆட்கொல்லி புலி வனத்துறையினரின் கண்ணில் தென்பட்டது. அதற்கிடையில், மசினகுடி அருகே உள்ள குறும்பர்பாடியைச் சேர்ந்த பசுவன்(65) என்ற முதியவரை அடித்து கொன்றது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே இரண்டு பேரை கொன்ற அந்த புலி, இதுவரை 4 பேரை கொன்றுள்ளது.

தொடர்ந்து 9வது நாளாக அந்த புலியை பிடிக்கும் பணியில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே, புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கிய வன உயிரின பாதுகாவலர் எக்காரணம் கொண்டும் புலி சுட்டுக்கொல்லப்படாது என்று உறுதியளித்துள்ளார். 

இந்த நிலையில், புலி தாக்கி இறந்த ஆதிவாசி மங்கல பசுவன் குடும்பத்தினரை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வனத்துறையில் வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது எனவும்  முடிந்தவரை புலிக்கு ஆபத்தில்லாமல்  பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முயற்சிகள் தோல்வியுறும் நிலையில், சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்