50 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் சதம் அடித்தது

சென்னையில் 50 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து மீண்டும் சதம் அடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Update: 2021-10-03 22:10 GMT
சென்னை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஜூலை முதல் வாரம் முதன் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல்-டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து வரும் நிலையில், எரிபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

விலை குறைப்பு

இந்தநிலையில், தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி, சமீபத்தில் தமிழக பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.100-க்கு கீழாகவே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை எண்ணெய் நிறுவனங்கள் திடீரென பெட்ரோல் விலையை உயர்த்தி விலை நிர்ணயம் செய்தன. அதாவது, முந்தைய நாளை விட கூடுதலாக 22 காசு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தன.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

மீண்டும் சதம் அடித்தது

அதாவது, மாமல்லபுரத்தில் ரூ.100.24-க்கும், மரக்காணத்தில் ரூ.100.98-க்கும், கடலூரில் ரூ.101.83-க்கும், சிதம்பரத்தில் ரூ.102.11-க்கும், மதுரையில் ரூ.100.37-க்கும், திருச்சியில் ரூ.100.24-க்கும், சேலத்தில் ரூ.100.54-க்கும் பெட்ரோல் விற்பனை ஆனது.

போக்குவரத்து செலவு காரணமாக சென்னையை தவிர்த்து பிற இடங்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று கூடுதலாகவே விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது. சென்னையிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.80-க்கு விற்பனை ஆனது. இந்தநிலையில் பெட்ரோல் விலை சென்னையில் மீண்டும் சதம் அடித்தது. முந்தைய நாள் விலையை காட்டிலும் 21 பைசா அதிகரித்து ரூ.100.01-க்கு பெட்ரோல் நேற்று விற்பனை ஆனது.

சென்னையில் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி பெட்ரோல் ரூ.102.49-க்கு விற்பனை ஆனது. அந்தவகையில் 50 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியிருக்கிறது.

வாகன ஓட்டிகள் கலக்கம்

பெட்ரோலை போலவே டீசலின் விலையும் உயர்ந்திருக்கிறது. முந்தைய நாள் விலையை காட்டிலும் 29 பைசா உயர்ந்து, சென்னையில் நேற்று ரூ.95.31-க்கு டீசல் நேற்று விற்பனை ஆனது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்திருக்கிறது.

பெருநகரங்கள்

இதுபோல், நாட்டின் இதர பெருநகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தேசிய அளவில் பெட்ரோல் விலை 25 காசுகளும், டீசல் விலை 30 காசுகளும் உயர்ந்தது.

இதனால், டெல்லியில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவாக ரூ.102.39 ஆகவும், டீசல் விலை ரூ.90.77 ஆகவும் உயர்ந்தது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.108.43 ஆகவும், டீசல் விலை ரூ.98.48 ஆகவும் அதிகரித்தது.

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக பீப்பாய்க்கு 76.71 டாலராக உயர்ந்து விட்டது. கச்சா எண்ணெய் வினியோகத்தில் உலக அளவில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்