பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மறைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-12 17:29 GMT
சென்னை,

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83. கடந்த 1965 ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். 'வெண்ணிற ஆடை' படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. 

அவரது மறைவுக்கு பல்வேறு திரையலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-

“பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார்.

எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். திரு. ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்