பொன்னேரி, திருநின்றவூர் பேரூராட்சிகள் நகராட்சி ஆகின்றன அரசாணை வெளியீடு

பொன்னேரி, திருநின்றவூர் பேரூராட்சிகள் நகராட்சி ஆகின்றன அரசாணை வெளியீடு.

Update: 2021-10-15 20:12 GMT
சென்னை,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தேர்வுநிலை பேரூராட்சி 8.04 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011-ம் ஆண்டில் அங்கு 31 ஆயிரத்து 25 மக்கள் தொகையும், தற்போது 36 ஆயிரத்து 398 மக்கள் தொகையும் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கான ஆண்டு சராசரி வருமானம் அங்கு ரூ.7.16 கோடியாகும்.

அதன் அருகில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடம்பெரும்பாக்கம், கொடூர் ஊராட்சி ஆகியவை வளர்ச்சியடைந்த ஊராட்சிகளாக உள்ளன. எனவே இவற்றை பொன்னேரி தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைத்து பொன்னேரியை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருநின்றவூர் சிறப்பு நிலை பேரூராட்சி 11 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011-ம் ஆண்டில் 37 ஆயிரத்து 95 மக்கள் தொகையும், தற்போது 44 ஆயிரத்து 514 மக்கள் தொகையும் கொண்டுள்ளது.

இதற்கு அருகில் உள்ள நடுக்குத்தகை, நெமிலிச்சேரி ஆகிய ஊராட்சிகள் வளர்ச்சியடைந்ததாக உள்ளதால் திருநின்றவூர் பேரூராட்சியுடன் அவற்றை இணைத்து அதை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று மாவட்டக் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்