முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில் அதிரடி சோதனை

அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Update: 2021-10-23 00:04 GMT
சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். ரூ.27.22 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி கடந்த 18-ந் தேதி அன்று விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவரோடு தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.23.85 லட்சம் ரொக்கப்பணம், 4.87 கிலோ தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.

உதவியாளர் அலுவலகத்தில் சோதனை

18-ந் தேதி அன்று சோதனை நடத்த முடியாத இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் வைத்தனர். நேற்று காலை முதல் அந்த இடங்களில் சீலை அகற்றி விட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் நண்பர் சந்திரசேகரின் ஆயிரம் விளக்கு அலுவலகத்தில் சோதனை போட்டார்கள்.

அடுத்து உதவியாளர் சரவணனின் நந்தனம் விரிவாக்கத்தில் உள்ள வீடு, இன்னொரு உதவியாளர் முருகனின் அண்ணாநகர் சாந்திகாலனி வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது. மாலையிலும் சோதனை நீடித்தது. சேலத்தில் டாக்டர் செல்வராஜா என்பவரின் தரண் ஆஸ்பத்திரியிலும் சோதனை வேட்டை நடந்தது.

மேலும் செய்திகள்