தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது: தொல்.திருமாவளவன்

தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2021-10-23 18:33 GMT
மதுரை அரசரடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா காலகட்டத்தில் கைதட்டியது, விளக்கேற்றிய விவகாரத்தில் பிரதமருக்கு குற்ற உணர்வு மேலோங்கி உள்ளது. அதனை தற்போது வெளிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சிகளை அவர் விமர்சிக்கிறார். வேறு எந்த ஒரு நாட்டிலும் கொரோனாவை ஒழிக்க கைதட்டியது கிடையாது. இதுவேடிக்கையாக இருந்தது. அது சரியல்ல என்பதை இப்போதுதான் மோடி உணர்ந்திருக்கிறார்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது, கொடூரமாக கொலை செய்வது நின்றபாடில்லை. தற்போது கோட்டைப்பட்டினம் மீனவர் ஒருவர் மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொடூரம் சகிக்கமுடியாதது. தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது கண்டனத்திற்குரியது. சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இலங்கை சிறையில் சிக்கி இருப்பவர்களையும் மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்