முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்க கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-11-08 21:09 GMT
தேனி,

முல்லைப்பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்கக்கோரியும், தமிழக, கேரள அரசுகளை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசுக்கு அக்கறையில்லை. பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்ததாக, சம்பந்தமே இல்லாமல் தமிழக முதல்-அமைச்சர், கேரள முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கேரள அரசு மரங்களை வெட்ட அனுமதி அளிக்கவில்லை என கூறிவிட்டது.

பகல் கனவு

மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கனவு இருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் துணை பிரதமராக மு.க.ஸ்டாலின் வரப்போகிறாராம். அதற்கு கம்யூனிஸ்டு கட்சிகள் துணை நிற்க போகிறார்களாம். குறிப்பாக கேரள கம்யூனிஸ்டு கட்சியினர் ஆதரவு கொடுப்பார்களாம். மு.க.ஸ்டாலின் துணை பிரதமர் ஆக வேண்டும் என்றும், அவருடைய மகன் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வேண்டும் என்றும் கனவு காண்கிறார். அது பகல் கனவாகிபோகும். வரும் தேர்தலில் 400 பா.ஜனதா எம்.பி.க்கள் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார்.

தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் அணையில் இருந்து கேரள மந்திரிகள் தண்ணீர் திறந்து விட்ட சம்பவத்துக்கு, தங்களின் தவறை உணர்ந்து மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன்சந்திப்பு

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்