ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன: எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு அமைச்சர் பாராட்டு

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன. இதனையடுத்து டாக்டர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2021-11-16 23:38 GMT
சென்னை,

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் கடந்த 11-ந்தேதி அன்று ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன. அனைத்து தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், நர்சுகளை பாராட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை நேற்று வழங்கினார். பின்னர் 68 குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் டாக்டர் தாரேஷ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜன், மகப்பேறு ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சுகப்பிரசவம்

எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 68 குழந்தைகளில் 60 சதவீத குழந்தைகள் சுகப்பிரசவத்திலும், 40 சதவீத குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமும் பிறந்துள்ளன. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளை பொறுத்தவரை அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் 40 முதல் 45 சதவீதமாக இருக்கிறது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் 60 முதல் 65 சதவீத குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கின்றன. அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் 65 சதவீத பிரசவங்கள் நடக்கிறது. 35 சதவீதம் பேர் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் 20 சதவீத குழந்தைகள் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் பிறக்கின்றன.

ஊக்கப்படுத்தக்கூடாது

80 சதவீத குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறக்கின்றன. முன்பெல்லாம் 100 சதவீதம் சுகப்பிரசவம் மட்டுமே இருந்தது. தற்போது சுகப்பிரசவம் குறைந்து, அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் சதவீதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு காரணம், தம்பதிகள் தாங்கள் விரும்பும் நாளில் குழந்தையை பெற்றெடுப்பதுதான். இதனை தவிர்க்க வேண்டும். மேலும் இதை ஊக்கப்படுத்தக்கூடாது என டாக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

மேலும், அறுவை சிகிச்சையை தவிர்க்குமாறு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கடிதம் எழுத உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்