நேரடி தேர்வுகள் நடத்த எதிர்ப்பு: மதுரையில் கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது

நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-17 08:33 GMT
கோப்புப்படம்
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை மூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே விளாச்சேரி செல்லும் சாலையில் நேற்று 2 தனியார் கல்லூரியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களுக்கு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு கூறினர். அப்போது மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஆன்லைன் மூலம் அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டது. மேலும் உள் தேர்வுகளையும் கூட ஆன்லைனில் நடத்தினார்கள். ஆனால் தற்போது செமஸ்டர் தேர்வை நேரடியாக எழுத வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பு வரும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திடீரென்று கல்லூரி வாசலில் முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து மறுபடியும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் மாணவ-மாணவிகள் அனைவரும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து,பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,3 வது நாளாக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்