சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு ஓய்வூதியம் மு.க.ஸ்டாலின் ஆணையை வழங்கினார்

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-11-26 00:05 GMT
சென்னை,

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதியத் திட்டங்களின் வாயிலாக இதுநாள் வரை 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டங்களுக்காக 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 807 கோடியே 56 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது, சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், மாநில அளவில் 1 லட்சத்து ஆயிரத்து 474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டனர்.

ஒரு லட்சம் பேருக்கு ஆணை

அதன்படி இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 48 ஆயிரத்து 77 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆயிரத்து 359 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 346 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 739 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 28 ஆயிரத்து 209 பயனாளிகளுக்கும், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 397 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆயிரத்து 732 பயனாளிகளுக்கும், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 554 பயனாளிகளுக்கும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 61 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1 லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் என்.வெங்கடாசலம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்