ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் நட்சத்திர ஓட்டல் அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-26 00:09 GMT
சென்னை,

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வர் (வயது 34). இவர் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை துறையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நந்தினி. இவரும் டாக்டர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வர் தனது மனைவி நந்தினியை பிரிந்து, மதுரவாயலில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை மகேஸ்வர் தனது காரில், டிரைவர் கார்த்திக்குடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். மகேஸ்வரை ஓட்டலில் இறக்கிவிட்டு, அவரது கார் டிரைவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து மகேஸ்வர், அந்த நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

விஷ ஊசி போட்டு தற்கொலை

இந்தநிலையில், அதே ஆஸ்பத்திரியில் மகேஸ்வருடன் பணிபுரிந்து வந்த அவரது நண்பர், அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மகேஸ்வர் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து மகேஸ்வரின் கார் டிரைவரை தொடர்பு கொண்டு, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறைக்கு அவரது நண்பர் சென்றார்.

வெகுநேரமாக அறைக்கதவை தட்டியும், கதவு திறக்காததால், ஓட்டல் ஊழியர்களை வரவழைத்து, மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று அவரது நண்பர் பார்த்தார். அப்போது, மகேஸ்வர் படுக்கையில் அசைவின்றி கிடந்துள்ளார். அவரது அருகில், விஷ ஊசி போட்டுக்கொண்டதற்கான தடயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த ராயப்பேட்டை போலீசார், மகேஸ்வரை மீட்டு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம்

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்ப பிரச்சினை காரணமாக டாக்டர் மகேஸ்வர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

மேலும், தற்கொலைக்கு முன்பு, ‘தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், யாரையும் துன்புறத்த வேண்டாம் என்றும்’, கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இருந்தபோதிலும், மகேஸ்வர், குடும்ப பிரச்சினை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்