நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தரவேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-02 00:03 GMT
சென்னை,

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

மழை ஓய்ந்தாலும் இன்னமும் சில பகுதிகளில் வெள்ளம் வடிந்தபாடில்லை. இதற்கு நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

பாதுகாக்க வேண்டும்

இந்தநிலையில் சென்னையை அடுத்துள்ள சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர்நிலை, விழுப்புரம் வடவம்பாலம் பாசன கால்வாய், மேல்மருவத்தூர் மற்றும் கீழ் மருவத்தூர் ஏரிகள், சோத்துப்பாக்கம் ஏரி, கடலூரில் வி.மாத்தூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்கக்கோரியும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் ஏராளமான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

இந்த வழக்குகள் எல்லாம் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள், “தண்ணீர் மிகவும் அவசியமானது, தற்போது தொடர் மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 4 மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அகற்ற வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டே உத்தரவிட்டுள்ளது. எனவே, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசு தீவிரப்படுத்த வேண்டும். அந்த பணியை கண்காணிப்போம்” என்று உத்தரவிட்டனர்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில அரசு பிளீடர் முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, “ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகளை தற்போது அரசு எடுத்து வருகிறது. இனி நீர்நிலைகளில் புதிய ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது. இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்றனர்.

அரசும் ஆக்கிரமித்துள்ளது

அப்போது ஒரு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வசந்தகுமார், “நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அரசு வழங்க முடியாது. முழு அமர்வு தீர்ப்பை முழுமையாக அரசு அமல்படுத்த வில்லை” என்றார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், நீர்நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல், நீர்நிலைகளிலேயே குப்பை கொட்டும் மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசும் ஆக்கிரமித்துள்ளது என்று வாதிட்டனர்.

அறிக்கை

இதையடுத்து நீதிபதிகள், “மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு முழு அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுக்கு போதிய அவகாசம் கொடுத்தும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதற்கு மேலும் கருணை காட்ட முடியாது. எனவே, இதுகுறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்கள் அரசு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்