மாப்பிள்ளை மதுபோதையில் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் மாலையை கழற்றி வீசியதால் பரபரப்பு

மாப்பிள்ளை மதுபோதையில் இருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். அவர், மாலையை கழற்றி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-10 22:08 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டம் வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

மது மயக்கத்தில் மாப்பிள்ளை

மணப்பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தார். அங்கு மணமகன் வீட்டார் யாரும் இல்லை.

உடனே மாப்பிள்ளை வீட்டுக்கு அனைவரும் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, மணமகன் தன்னை சுற்றி நடப்பது என்னவென்பது தெரியாத நிலையில் மது போதையில் அரை மயக்கத்தில் இருந்துள்ளார்.

திருமணத்தை நிறுத்திய பெண்

இதைக்கண்ட மணமகள், தனக்கு இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என்று ஆவேசமாக கூறிவிட்டு தனது கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வீசி திருமணத்தை நிறுத்தினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மாப்பிள்ளை வீட்டார், மணமகள் வீட்டாரிடம் சமரசம் பேசி பார்த்தனர்.

ஆனால் அந்த மணமகள், திருமணத்துக்கு முன்னரே இப்படி குடித்தவர், திருமணத்துக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கி விடுவார் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தரப்பினர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தனர்.

மணமகளிடம் கெஞ்சிய மாப்பிள்ளை

அந்த புகாரில், திருமணத்துக்கு ஆன செலவு தொகையை மணமகன் வீட்டாரிடம் வாங்கி தர வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் மாப்பிள்ளை சரவணன், அவருடைய குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது போதை தெளிந்த சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று போலீசாரிடம் கூறினார். அதற்கு போலீசார், மணப்பெண் சம்மதிக்க வேண்டும். அவரிடம் பேசி பாருங்கள் என்று கூறிவிட்டனர்.

உடனே சரவணன், போலீஸ் நிலையத்தில் மணமகளிடம், இனிமேல் நான் குடிக்க மாட்டேன், என்னை திருமணம் செய்து கொள் எனக்கூறி கெஞ்சினார். ஆனால் அவரது கெஞ்சலை அந்த பெண் ஏற்க மறுத்ததுடன், பிடிவாதமாக மாப்பிள்ளையை வேண்டாம் என்று கூறி விட்டு அங்கிருந்து தனது உறவினர்களுடன் சென்றார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்