தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு.. பணத்திற்காக பெண்ணிடம் சங்கிலி பறித்த புதுமாப்பிள்ளை

தனது மனைவி தாலி பிரித்து கோர்க்கும் சடங்கிற்கு பணம் இல்லாததால் சென்னை அண்ணாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-15 10:11 GMT
பூந்தமல்லி, 

சென்னை அண்ணாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து நடந்து சென்ற புவனேஸ்வரி என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலி சங்கிலியை வாலிபர் ஒருவர் பறித்து சென்றுவிட்டார். இதுபற்றி அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை செய்தனர். அதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்து இருந்தார். அதை வைத்து விசாரணை நடத்திய ேபாலீசார், அயனாவரத்தை சேர்ந்த யோகேஷ் (வயது 29) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், புவனேஸ்வரியிடம் சங்கிலி பறித்ததை ஒப்புக்கொண்டார். தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வரும் யோகேசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. 3-வது மாதத்தில் புதுமனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடத்த வேண்டும் என்பதால், அதற்கு தாலி சங்கிலி வாங்க பணம் இல்லாததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் புவனேஸ்வரியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். யோகேசை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்