கோவையில் வனத் துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது- வீடியோ
கோவையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.;
கோவை,
கோவை அருகே மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர், பி.கே.புதூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகள் அருகே சிறுத்தை ஒன்று புகுந்து நாய்களை அடித்துக் கொன்று அச்சுறுத்தி வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக சிறுத்தையை தேடி வந்தனர். அப்போது பி.கே. புதூரில் உள்ள தனியார் குடோனுக்குள் சிறுத்தை புகுந்து உள்ளதை கண்டறிந்தனர்.
இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தனியார் குடோனில் இறைச்சி மற்றும் தண்ணீர் சேவல், கோழியுடன் கூடிய கூண்டு அமைத்து கண்காணிப்பு கேமரா மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கடந்த 5 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் கூண்டில் சிக்கியது. அப்போது இரண்டு முறை கூண்டுக்குள் சென்று திரும்பிய நிலையில் 3-வது முறையாக சென்றபோது அகப்பட்டது.
இதனிடையே பிடிப்பட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது குடோனில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சிறுத்தை பிடிப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
கோவையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது..!#Kovai#Cheetah#Forest#Officer#CCTV#viralvideo#Trending#Dailythanthi#dtpic.twitter.com/ggHiV7kJAq
— DailyThanthi (@dinathanthi) January 22, 2022
மேலும் ஊருக்குள் மீண்டும் சிறுத்தை வாராத வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.