பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் எவ்வளவு? - தமிழக அரசு இன்று முக்கிய முடிவு
தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர்.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், புத்தாண்டில் பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.
பொதுமக்கள் மத்தியிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.4 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற இருக்கிறது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் என்னென்ன, அதற்கு எவ்வளவு செலவு ஏற்படும், கூடுதலாக ரொக்கப் பணம் எவ்வளவு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இதில், அரிசி அட்டைதாரர்கள் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் கிடைக்கும். ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.