14 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் எளிமையாக நடந்தது. நிகழ்ச்சியை கோவிலின் வெளியே இருந்தும், குடியிருப்புகளின் மாடிகளில் இருந்தும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Update: 2022-01-23 22:15 GMT
சென்னை,

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, இதற்கான திருப்பணிகள் தொடங்கின. கடந்த மாதம் 13-ந்தேதி கும்பாபிஷேக யாகசாலைக்காக பந்தக்கால் நடப்பட்டன. கோவில் மூலஸ்தான பாலாலயம் கடந்த 5-ந்தேதி நடந்தது. கும்பாபிஷேக ஆயத்த பூஜைகள் 17-ந்தேதி தொடங்கியது. யாகசாலை பிரவேசம் 20-ந்தேதியன்று நடந்தது.

கும்பாபிஷேகத்துக்காக முருகப்பெருமானுக்கு 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 75 ஹோம குண்டங்கள் என யாகசாலையில் 108 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டன. இதில் 1,300 கலசங்கள் வைக்கப்பட்டன. யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் பிச்சை குருக்கள் தலைமையில் 100 வேதவிற்பன்னர்கள் நிகழ்த்தினர். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை உள்பட 15 புண்ணிய நதிகளின் நீர், 9 பிரசித்தி பெற்ற கோவில்களின் நீர், அறுபடை வீடு கோவில்களின் நீர் கும்பாபிஷேகத்துக்காக கொண்டு வரப்பட்டது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலைகள் தொடங்கின. அதைத்தொடர்ந்து நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹூதி நடந்தது. 7 மணி முதல் பரிவார யாகசாலையில் மகா பூர்ணாஹூதி நடந்தது. 9.30 மணிக்கு யாத்ரா தானம் முடிந்து கலச புறப்பாடு எனும் விமானங்களுக்கு கலச நீர் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, 10.30 மணிக்கு கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் பச்சை வஸ்திரத்தை அசைக்க அனைத்து ராஜகோபுரங்கள், விமான கலசங்களுக்கும் கும்ப நீர் சேர்க்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

மஹா கும்பாபிஷேகத்தை சர்வசாதகம் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. அனைத்து பரிவாரங்களுடன், வடபழனி ஆண்டவர் கும்பாபிஷேகம் தீபாராதனை காலை 11 மணிக்கு நடந்தது. முழு ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் கோவிலின் வெளியே இருந்தும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளின் மாடிகளில் இருந்தும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர். பக்தர்களின் வசதிக்காக கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை சில `யூடியூப்' சேனல்கள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திருமுறைப் பாராயணம்

மாலையில் மஹா அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைவேளையில் சதுர்வேத பாராயணம், மூலமஹாமந்த்ர ஜப பாராயணம், திருமுறைப் பாராயணம், நாத மங்கள இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.

கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதன்மைச்செயலாளர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர்கள் ரேணுகாதேவி, காவேரி, சுதர்ஷன், லட்சுமணன், உதவி கமிஷனர் சித்ராதேவி. எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்