50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்...!
நாமக்கல் அருகே 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 7 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
ஊட்டி,
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஊட்டியை சுற்றிப் பார்க்க ஒரு காரில் வந்தனர். அவர்கள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, இன்று காலை முதுமலைக்கு செல்வதற்காக கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றனர்.
ராஜ்குமார் (வயது 21) என்பவர் காரை ஓட்டினார். கார் வேகமாக சென்றதாக தெரிகிறது. 23-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோர தடுப்புகளை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்துக்கு உள்ளான கார் பள்ளத்தில் உருண்டு ஓடியது. அப்போது ஒரு மரத்தில் மோதி நின்றதால் காரில் இருந்த 7 மாணவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் கார் டிரைவர் ராஜ்குமார், நாமக்கல் பாலப்பட்டியை சேர்ந்த அபிஷேக் (19) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். தென்னரசு (19), கோகுல் (19) உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
விரைந்து வந்த போலீசார் மற்றம் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை காரில் இருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.