போலி ஆவணங்கள் தொடர்பான வழக்கு - நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை நோட்டீஸ்

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Update: 2022-04-27 09:43 GMT
மதுரை,

நடிகர் தனுஷ் தனது மகன் என கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணையின் போது, நடிகர் தனுஷ் தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக கதிரேசன் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்க கோரிய வழக்கை மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய கீழமை நீதிமன்றம் அதனை மதுரை மாநகராட்சிக்கு அனுப்பி இருந்த நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமலேயே நீதித்துறை நடுவர் வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்க்கத்தக்கது அல்ல என்றும், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கதிரேசன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

மேலும் செய்திகள்