சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2025-12-30 11:56 IST

சென்னை,

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடுவித்தனர். இரண்டாவது நாளாக 27-ந்தேதி, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.

மூன்றாம் நாளாக நேற்று முன் தினம் சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். நேற்று உழைப்பாளர் சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்