நாற்காலி பயத்தில் ரங்கசாமி மவுனம்

ஜிப்மர் இந்தி திணிப்பு விவகாரத்தில் நாற்காலி பறிபோய் விடுமோ? என்ற பயத்தில் ரங்கசாமி மவுனம் காப்பதாக நாராயணசாமி கூறினார்.

Update: 2022-05-11 18:51 GMT
ஜிப்மர் இந்தி திணிப்பு விவகாரத்தில் நாற்காலி பறிபோய் விடுமோ? என்ற பயத்தில் ரங்கசாமி மவுனம் காப்பதாக நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வாய்மூடி மவுனம்
ஜிப்மர் இயக்குனர் அலுவலக ரீதியாக விடுத்துள்ள சுற்றறிக்கையின் மூலம் இந்தியை திணித்துள்ளனர். புதுச்சேரியை பொறுத்தவரை தமிழ் தான் முதன்மையான மொழி. ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு ஆகியவை இணைப்பு மொழிகள். 
ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய சென்ற கவர்னர் ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை என்கிறார். அவரது பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால் அவர் தமிழுக்கு எதிராகவும், இந்திக்கு ஆதரவாகவும் உள்ளார். தவறான தகவலை மக்களிடம் பரப்புகிறார். ஜிப்மர் விவகாரத்தால் இவ்வளவு பிரச்சினைகள், பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி வாய்மூடி மவுனமாக இருக்கிறார். இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருக்கிறார். ஏதேனும் பேசினால் முதல்-அமைச்சர் நாற்காலி பறிபோய்விடுமோ? என்ற பயத்தில் இருக்கிறார்.
தொடர் போராட்டம்
மத்திய கலால் வரி ரூ.600 கோடி புதுச்சேரிக்கு கிடைத்துள்ளது என கவர்னர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். புதுச்சேரியை பொறுத்தவரை கலால்வரி ஒரு பைசா கூட நமக்கு கிடைக்காது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தமிழகத்துக்கு 41 சதவீதம் தான் கிடைக்கும். ஆனால் புதுச்சேரிக்கு எதுவும் கிடைக்காது. 
புதுச்சேரியை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் திட்டங்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் கவர்னர் தான் பேசுகிறார். கவர்னர் பா.ஜ.க. மாநில தலைவர் போல் செயல்படுகிறார். பா.ஜ.க.வினர் புதுவையில் இந்தி மொழியை முதன்மை மொழியாக கொண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இந்தி திணிப்பு அறிவிப்பை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்