தாறுமாறாக ஓடிய கார் மோதி 10 வாகனங்கள் சேதம்
புதுவையில் குடிபோதையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் தாறுமாறாக ஓட்டிய கார் மோதி 10 வாகனங்கள் சேதமடைந்தன. 5 பேர் படுகாயமடைந்தனர்.;
புதுவையில் குடிபோதையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் தாறுமாறாக ஓட்டிய கார் மோதி 10 வாகனங்கள் சேதமடைந்தன. 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்
புதுச்சேரி முத்திரையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற நண்டு ஆறுமுகம் (வயது 45). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இவர் நேற்று இரவு 7 மணி அளவில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பாண்டி மெரினா கடற்கரைக்கு காரில் சென்றார்.
அங்கு அவரது குடும்பத்தினர் கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆறுமுகம் காரில் இருந்தப்படியே மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் குடும்பத்தினர் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு திரும்பி வந்தனர்.
தாறுமாறாக ஓடிய கார்
இதையடுத்து அவர்களை ஏற்றிக்கொண்டு ஆறுமுகம் காரை ஓட்டி வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ஆறுமுகத்தால் நிதானமாக காரை ஓட்ட முடியவில்லை. இதனால் கார் தாறுமாறாக ஓடியது. காரில் வந்த குடும்பத்தினர் கார் தறிக்கெட்டு ஓடுவதை கண்டு கூச்சல் போட்டனர். மேலும் காரை நிறுத்தும் படி வலியுறுத்தினர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆறுமுகம் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
வம்பாகீரப்பாளையம் சாலையில் வரும்போது கார்மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். ஆனால் ஆறுமுகம் காரை இன்னும் வேகமாக ஓட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த காரை விரட்டிச் சென்றனர்.
டயர் வெடித்தது
பழைய பஸ்நிலையம் அருகே சென்றபோது அந்த காரின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதன்பிறகும் ஆறுமுகம் காரை நிறுத்தவில்லை. ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த பொதுமக்கள் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று ஆறுமுகத்தை பிடித்து சென்றனர். பின்னர் அவரை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
10 வாகனங்கள் சேதம்
ஆறுமுகம் தாறுமாறாக காரை ஓட்டியதில் சந்தா சாகிப் வீதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவரது மகன் ஜாவித் (16), உப்பளம் பகுதியை சேர்ந்த ரெஜிஸ் (38), தேங்காய்திட்டை சேர்ந்த சோழன் (47), தவளக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் (19), தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்த ஜோசப் (40) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.