போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவிலில் ஒரே நாளில் 217 பேர் சிக்கினர்

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேர் சிக்கினர். இதில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-06-02 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேர் சிக்கினர். இதில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

217 பேருக்கு அபராதம்

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று கோட்டார், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களும் என மொத்தம் 217 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சிலர் மீது வழக்கும் பாய்ந்தது.

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை மீறுவோர் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகன உரிமம் அல்லது ஓட்டுனர் உாிமம் இல்லை என்றால் ரூ.8 ஆயிரம் வரையிலும் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

வாகனங்கள் பறிமுதல்

அதன்படி கடந்த 31-ந் தேதி கலெக்டர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த 43 பேருக்கும், நேற்றுமுன்தினம் 36 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நின்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் 82 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.82 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதுதவிர வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் (நோ பார்க்கிங்) நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், கார்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்