300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் பகுதி கடைகளில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் கீதா உத்தரவின்பேரில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். பல கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து கடைகளில் இருந்து மொத்தம் 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.