ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் 8 வயது மாணவி கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூலை மாதம் 12-ஆம் நாள் சனிக்கிழமை அரை நாளுடன் பள்ளிக்கூடம் முடிவடைந்த நிலையில், பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமியை கொடூரன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தியை கேட்ட போதே துடித்துப் போனேன். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் நினைவுக்கு வருகின்றன.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்து வந்தனர். காவல்துறைக்கு எதிராக பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், குற்றவாளியான பிஸ்வகர்மாவும் நீண்ட தாமதத்திற்கு பிறகுதான் கைது செய்யப்பட்டார். போதிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், இந்தக் கொடுமைக்கு நீதி கிடைக்காமலேயே போயிருக்கும். குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மேல்முறையீடுகளிலும் அது உறுதி செய்யப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தண்டிக்கப்பட்டிருக்கும் குற்றவாளி அசாமிலிருந்து ஆந்திரா சென்று அங்குள்ள தொடர்வண்டி நிலையத்தில் உள்ள கடையில் பணி செய்து வந்திருக்கிறார். வார இறுதி நாள்களில் தமிழ்நாட்டுக்கு வந்து கஞ்சா புகைப்பதையும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பது தான் இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய குற்றங்களைத் தடுக்க தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.