1,000 ஒப்பந்த செவிலியர்கள் முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 724 செவிலியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவர்.;

Update:2025-12-24 18:38 IST

சென்னை,

தமிழக அரசு மருத்துவ துறையில் 17 ஆயிரம் பேர் நிரந்தர செவிலியர்களாகவும், 13 ஆயிரம் பேர் ஒப்பந்த செவிலியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த போராட்டம் சமீபத்தில் தீவிரமடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். அங்கேயும் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியேறிய செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், போராட்ட குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறினார். மேலும் தொகுப்பூதிய செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு குறித்தும் பரிசீலனை செய்யப்படும். தற்போது 723 காலி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

எனினும், 2 முறை நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இன்று காணொலி வழியே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதன்பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், 1,000 ஒப்பந்த செவிலியர்கள் முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும். ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 724 செவிலியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவர். இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்