குமரியில் 3-வது நாளாக உற்சாகத்துடன் நடந்தார்: சாலையின் இருபுறமும் திரண்டு ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு
குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டு பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். கேரளாவில் நாளை முதல் பயணத்தை தொடங்க உள்ளார்.;
நாகர்கோவில்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.
இதற்கான தொடக்க விழா கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்தது. நேற்று முன்தினம். 2-வது நாள் பயணத்தை முடித்ததும் இரவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கேரவனில் தங்கினார்.
3-வது நாள் பாதயாத்திரை
3-வது நாளான நேற்று காலை பாதயாத்திரையை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து தொடங்கினார். முன்னதாக அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் நாகர்கோவிலைச் சேர்ந்த எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை வரவழைத்து அவர் கவுரவப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கினார். தொண்டர்கள் புடை சூழ அவர் உற்சாகத்தோடு நடந்தார். அவருடன் பாதயாத்திரை குழுவினரும் வேகமாக நடந்து சென்றனர்.
3-வது நாள் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், திக்விஜய்சிங், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட அகில இந்திய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு
பாதயாத்திரையில் சிலர் ராகுல்காந்தி உருவம் வரையப்பட்ட டி-சர்ட் அணிந்தபடி நடந்து சென்றதையும் காணமுடிந்தது.
சாலையின் இருபுறமும் திரண்டு நின்று ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக சுமார் 12 கி.மீ. தூரத்தை ராகுல்காந்தி காலை 9.30 மணிக்கு கடந்தார்.
மாலை 5.15 மணிக்கு புலியூர்குறிச்சியில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய அவர் அழகியமண்டபம் சந்திப்பில் 6.20 மணிக்கு முடித்தார். குறிப்பிட்ட நேரத்தை விட நேற்றும் வேகமாக நடந்து வந்து ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "நான் இந்த பாதயாத்திரை மேற்கொள்ள காரணம், நாடு எந்த விதத்திலும் பிளவுபட்டு விடகூடாது என்பது தான். சாதி, மதம் மற்றும் மொழி ஆகிய எந்த விதத்திலும் நாடு பிளவுபடாமல், இந்திய நாடாக மட்டும் இருக்க வேண்டும்" என்றார். பின்னர் அவர் முளகுமூடில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளிக்கு கார் மூலம் சென்று தங்கினார்.
பாதயாத்திரையின் போது ராகுல்காந்திக்கு சில இடங்களில் பூக்களை தூவி மாணவ, மாணவிகள் வரவேற்றனர். மேலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடந்தது.
விவசாய சங்க தலைவர் சந்திப்பு
முன்னதாக ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். அவர் 2 கி.மீ. தூரம் ராகுல்காந்தியுடன் இணைந்து நடந்தார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தார்.
இன்று (சனிக்கிழமை) காலை முளகுமூட்டில் இருந்து 4-வது நாள் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கி கேரள மாநில எல்லையான செருவாரகோணத்தில் நிறைவு செய்கிறார்.
காலில் விழுந்த ஊராட்சி தலைவரை தடுத்து நிறுத்திய ராகுல்காந்தி
3-வது நாள் பாதயாத்திரையின் போது புலியூர்குறிச்சியில் உள்ள புனித தேவசகாயம் ஆலயத்தில் ராகுல்காந்தி ஓய்வு எடுத்தார். அப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 ஊராட்சி தலைவர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.
அந்த சமயத்தில், ஊராட்சி தலைவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அவர்கள் தங்களுடைய கருத்தை ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, "உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கேள்வி கேட்கும் திறமை குறையும் பட்சத்தில் தலைவராக முடியாது" என்றார்.
மேலும் ராகுல்காந்தியின் காலில் தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி தலைவர் எ.பி.டி.மகேந்திரன் விழுந்துள்ளார். ஆனால் அவரை ராகுல்காந்தி தடுத்து நிறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "யார் காலிலும் விழக்கூடாது. காலில் விழுவது தவறான கலாசாரம்" என்று அறிவுறுத்தினார்.
முதியவரை கீழே தள்ளிய பாதுகாப்பு படையினர்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கிய போது முதியவர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி அவரின் அருகில் செல்ல முயன்றார். உடனே பாதுகாப்பு படையினர் முதியவரை பிடித்து கீழே தள்ளினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த ராகுல்காந்தி பாதுகாப்பு வீரர்களை தடுத்து நிறுத்தி அந்த முதியவரை அழைத்து என்னவென்று அவரிடம் விசாரித்தார். பாதயாத்திரையில் பங்கேற்க வந்திருப்பதாக கூறினார். பாதயாத்திரையில் கலந்து கொள்ள வந்ததற்கு மிக்க நன்றி என்று அந்த முதியவரிடம் ராகுல்காந்தி தெரிவித்தார்.