லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

கோபால்பட்டி பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை கைது செய்தனர்.

Update: 2023-07-02 19:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி மற்றும் போலீசார் கோபால்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது கோபால்பட்டி பஸ்நிறுத்தம் அருகே ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், கோபால்பட்டி ராஜமணியம்பாள் நகரைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் (வயது 42), எருமக்காரன் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (39), இந்திரா நகரைச் சேர்ந்த கருப்பையா (35), கணவாய்பட்டி பங்களாவை சேர்ந்த பிச்சை (70) என்றும், இவர்கள் வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும், ஆன்லைன் மூலமாகவும் பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், ரூ.4 ஆயிரத்து 400 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்