தண்ணீரின்றி 500 ஏக்கர் குறுவை பயிர்கள் கருகின

திருத்துறைப்பூண்டி பகுதியில் தண்ணீரின்றி 500 ஏக்கர் குறுவை பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-09-28 19:15 GMT

திருத்துறைப்பூண்டி பகுதியில் தண்ணீரின்றி 500 ஏக்கர் குறுவை பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறுவை சாகுபடி

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் 80 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் குறுவை பயிரை சாகுபடி செய்து இருந்தனர்.

ஆனால் கடைமடை பகுதிக்கு போதிய அளவு காவிரிநீர் வந்து சேர வில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் டெல்டா மாவட்ட பகுதிகளில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

500 ஏக்கர் குறுவை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர், நுணாக்காடு, பள்ளங்கோவில் கொத்தமங்கலம், ரகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி கருகி உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தினந்தோறும் பார்த்து பார்த்து வளர்த்த நெற்பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகி கிடக்கின்றன. உடனடியாக அதிக அளவு தண்ணீர் திறந்தால் மட்டுமே மிஞ்சி இருக்கும் பயிர்களை காப்பாற்ற முடியும். நெல் விவசாயம் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

இழப்பீடு

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் எஞ்சிய பயிர்களை காப்பாற்றுவதற்கு அதிக அளவு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்