ரூ.2,877 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்ட 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் -அமைச்சர் தகவல்

ரூ.2,877 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்ட 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்.

Update: 2023-08-18 19:04 GMT

சென்னை,

பெண்களிடையே தொழிற்கல்வி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழில் பயிற்சி நிலையங்களிலும் ''நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்'' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்தவகையில் கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களை ரூ.2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் செலவில் ரோபோட்டிக்ஸ், அட்வான்ஸ்டு சி.என்.சி., மெக்கானிக் மின்சார வாகனங்கள் போன்ற தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த முன்னோடி பயிற்சிகளை பெற்று தங்களுடைய திறனை உயர்த்தி அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை மாணவிகள் பெறலாம்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் நிலைய மேலாண்மைக்குழு தலைவர்கள் வல்லபன், ரேணுகா, கவிதா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்