8 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனை

சேலத்தில் உள்ள பருப்பு குடோனில் 8 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-11-26 19:30 GMT

சேலத்தில் உள்ள பருப்பு குடோனில் 8 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பு

பொது வினியோகத்திட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயிலை 5 தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. அவ்வாறு இறக்குமதி செய்ததில் பலநூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பருப்பு குடோனில் சோதனை

இந்த நிலையில், சேலம் அன்னதானப்பட்டி மேட்டுவள்ளார் தெருவில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பருப்பு குடோனில் நேற்று முன்தினம் மாலையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சென்னை வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாரா, தர்மபுரி இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்பட 5 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். குடோனில் வைத்திருக்கும் பருப்பு இருப்பு விவரம் குறித்து குடோன் மேற்பார்வையாளர் அழகுமுத்துவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அங்கு 400 டன் அளவுக்கு பருப்பு இருப்பில் இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு வரை சுமார் 8 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்