மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர் அனுமதி
மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரியில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.;
மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரியில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
டெங்கு காய்ச்சல்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அவற்றை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், மதுரை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மதுரையை சுற்றி உள்ள பல பகுதிகளை சேர்ந்த 8 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டீன் ரத்தினவேல் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "மதுரையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிகள் நடக்கிறது. அதுபோல், அரசு ஆஸ்பத்திரியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, டெங்கு காய்ச்சலுக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் வகையில் 104 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தைகள், பெரியவர்கள் சிகிச்சை பெறலாம். ஐ.சி.யு. வசதியும் உள்ளது" என்றார்.
பெருங்குடியில் ஆய்வு
இதற்கிடையே, நேற்று பெருங்குடி பகுதியில் மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் வளர்ந்துள்ளதா என ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் கூறுகையில், மதுரையில் பயப்படும்படியாக டெங்கு பாதிப்பு இல்லை. மேலும், ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் டெங்கு பதிவாகவில்லை. ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு பதிவானால் அச்சப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் 2,3 பேருக்கு தான் பாதிப்பு வருகிறது. மதுரை மக்கள் தொகையை ஒப்பிடும்போது, இந்த பாதிப்பு மிகவும் குறைவு. சுகாதாரத்துறை சார்பிலும் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
டெங்கு இல்லாத மாவட்டம்
காய்ச்சலால் யாரும் பாதிக்கப்பட்டால், அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. வீடு, வீடாக சென்று தினமும் கொசு புழுக்கள் ஒழிக்கும் பணி நடக்கிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கையும் உள்ளது. காய்ச்சல் வந்த பின்னர் செய்ய வேண்டிய பணிகளும் தீவிரமாக நடக்கிறது. மதுரை மாவட்டத்தை முற்றிலும் டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.