கூலிப்படையை ஏவி வக்கீலை கொன்ற வழக்கில் ரவுடி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தமபாளையம் அருகே கூலிப்படையை ஏவி வக்கீலை கொன்ற வழக்கில் ரவுடி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

Update: 2023-10-19 20:15 GMT

நிலப்பிரச்சினை

தேனி மாவட்டம், கம்பம் பாரதி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 42). வக்கீல். இவருக்கும், கூடலூரை சேர்ந்த வக்கீல் ஜெயபிரபு (39) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஜெயபிரபுவுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபிரபு தரப்பினர், ரஞ்சித்குமாரை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக தேனியை சேர்ந்த ரவுடி செல்வம் என்ற சூப்புசெல்வம் (33) மூலமாக கூலிப்படையினரை பயன்படுத்தி ரஞ்சித்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

வக்கீல் கொலை

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி ரஞ்சித்குமார் உத்தமபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு சென்று விட்டு கம்பத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது சூப்புசெல்வம் தலைமையிலான கூலிப்படையினர் ஒரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு ரஞ்சித்குமாரை கீழே தள்ளினர். பின்னர் காரில் இருந்து இறங்கிய கூலிப்படையினர் ரஞ்சித்குமாரை பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டினர். அதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

12 பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், ஜெயபிரபு, சூப்புசெல்வம், சுக்காங்கல்பட்டியை சேர்ந்த மதன் (40), ராசிங்காபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் ராஜேஷ் (28), கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த பாண்டி வைரவன் மகன் ஆனந்தன் (30), வருசநாடு வைகை நகரை சேர்ந்த பிரதாப் (30), கூடலூர் அரசமரத் தெருவை சேர்ந்த வக்கீல் சொக்கர் (63), கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த தங்கராசு மனைவி மயிலம்மாள் (66), மதுரை மாவட்டம் அனுப்பானடியை சேர்ந்த சஞ்சய்குமார் (30), மதுரையை சேர்ந்த விஜயன் (39), மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா (22), மதுரை காமராஜர் நகரை சேர்ந்த கருப்பணன் மகன் வேல்முருகன் (23) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுகுமாறன் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், ஜாமீனில் வெளிவந்த மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதுதொடர்பாகவும் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

8 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்நிலையில் ரஞ்சித்குமார் கொலை வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில், வக்கீல்கள் ஜெயபிரபு, சொக்கர் மற்றும் ரவுடி செல்வம் என்ற சூப்புசெல்வம், ராஜேஷ், ஆனந்தன், விஜயன், ராஜா, வேல்முருகன் ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

பிரதாப், சஞ்சய்குமார், மயிலம்மாள் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் தேனி கோர்ட்டில் இருந்து அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்