பிளஸ்-1 தேர்வில் 87 சதவீதம் பேர் தேர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.87 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது

Update: 2023-05-19 18:45 GMT

கடலூர்

87.87 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 5-ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 117 அரசு பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள், 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 247 பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 127 மாணவர்களும், 14 ஆயிரத்து 913 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 40 பேர் தேர்வு எழுதினர்.

இதன் தேர்வு முடிவுகள் நேற்று மதியம் 2 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் 11 ஆயிரத்து 647 மாணவர்களும், 13 ஆயிரத்து 870 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 517 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.44, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.18. மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி 87.87 சதவீதமாகும்.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.87 சதவீதம் குறைவாகும். அதாவது கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 88.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

மாநிலத்தில் 27-வது இடம்

மேலும் இந்த தேர்ச்சியின் மூலம் மாநில அளவில் கடலூர் மாவட்டம் 27-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 22-வது இடத்தில் இருந்த கடலூர், இந்த ஆண்டு மேலும் 5 இடத்துக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் மொழிப்பாடத்தில் 3 பேரும், இயற்பியல் பாடத்தில் 15 பேரும், வேதியியலில் 33 பேரும், உயிரியலில் 6 பேரும், விலங்கியலில் 4 பேரும், கணித அறிவியல் பாடத்தில் 53 பேரும், கணக்கு பாடத்தில் 5 பேரும், பொருளியலில் 2 பேரும், வணிகவியலில் 12 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 24 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் ஒருவரும், கணினி பயன்பாட்டியல் பாடத்தில் 23 பேரும் என மொத்தம் 181 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்