நாம் அனைவரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ் வேர்களைத் தேடி பயணம் மூலமாக அயலகத் தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update:2026-01-12 12:32 IST

சென்னை,

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாம் அனைவரும், யாராலும் பிரிக்க முடியாத தமிழ் சொந்தங்கள், தமிழினச் சொந்தங்கள். இது பல்லாயிரமாண்டுகால சொந்தம், இன்னும் பல பல ஆண்டுகள் தொடரக்கூடிய சொந்தம்.

நாடுகளும், கடல்களும் நம்மை பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நன்மை செய்வதுபோலவே, அயல் நாட்டு தமிழர்களிடமும் சகோதர உணர்வுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் எடுத்துக்காட்டாக, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஓய்வில்லாமல் உழைத்து வருகிறது.

மொழி சிதைந்தால் இனம் சிதையும்; இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும். பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம். 4,000 ஆண்டு கால வரலாறு நம்முடையது என்பது கீழடி அகழாய்வால் உறுதியாகியுள்ளது. இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு.

திராவிட மாடல் ஆட்சியில் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டு, ஜன.12-ஐ அயலகத் தமிழர் நாளாக கொண்டாடி வருகிறோம். “தமிழால் இணைவோம்; உலகெங்கும் தமிழ்; தமிழ் வெல்லும்” என்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் வேர்களைத் தேடி பயணம் மூலமாக அயலகத் தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகிறோம்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் 105 முகாம்களின் வாழும் இலங்கை தமிழர்களுக்காக 7,469 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டு, படிப்படியாக செயல்படுத்தி வருகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உக்ரைன், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து 2,300-க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்