முதல் நிலை காவலர் குடும்பத்துக்கு ரூ.16¾ லட்சத்திற்கான காசோலை

பணியின் போது உயிரிழந்த முதல் நிலை காவலர் குடும்பத்துக்கு ரூ.16¾ லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Update: 2022-07-15 17:24 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை சேர்ந்தவர் வானவர்மன் (வயது 35). இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வேலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் எழுத்தராக பணிபுரிந்த முதல் நிலை காவலரான வானவர்மன் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி பணியின்போது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

அவர் கடந்த 2008-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். அதே ஆண்டில் தமிழக காவல்துறையில் சேர்ந்த போலீசார் அனைவரும் நிதிதிரட்டி வானவர்மன் குடும்பத்தினருக்கு உதவ முடிவு செய்தனர். இதையடுத்து போலீசார் சிலர் தமிழகம் முழுவதும் பணிபுரியும் 2008-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த போலீசாரை தொடர்பு கொண்டு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறாக திரட்டப்பட்ட ரூ.16 லட்சத்து 88 ஆயிரத்து 508-க்கான காசோலை வானவர்மன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் காவலர் மண்டபத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் ரூ.16,88,508-க்கான காசோலையை சுமதியிடம் ஒப்படைத்தனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.4,36,200-ல் ரூ.1 லட்சம் வானவர்மன் தாயாரிடமும், மீதமுள்ள ரூ.3,36,200 சுமதியிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்