குட்டி யானையின் காலடியில் சிக்கி போராடிய வன ஊழியர்
குட்டி யானையின் காலடியில் சிக்கி போராடிய வன ஊழியரின் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.;
பேரூர்
பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 காட்டு யானைகள் குட்டியுடன் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குட்டியானை வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. மற்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
குடியிருப்புக்குள் புகுந்த அந்த குட்டி யானை பிளிறியபடி அங்குமிங்கும் ஓடியது. இதையடுத்து அதை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது பயத்தில் அங்கிருந்து ஓடிய குட்டியானை, திடீரென்று வனத்துறையை சேர்ந்த வேட்டைதடுப்பு காவலர் நாகராஜன் என்பவரை கீழே தள்ளி காலால் மிதித்தது. அப்போது அந்த யானையின் காலடியில் சிக்கிய அவர் தப்பிப்பதற்காக போராடினார். இதில், பலத்த காயமடைந்த நாகராஜன், கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவர் குட்டியானையின் காலடியில் சிக்கி போராடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. 10 நிமிடங்களுக்கும் மேல் குட்டி யானையிடம் போராடிய அவர், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பி செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. தற்போது, அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.