சரக்கு ரெயில் தடம் புரண்டது
மதுரையில் மீண்டும் ஒரு சம்பவமாக, சரக்கு ரெயில் நேற்று தடம் புரண்டது.
மதுரையில் மீண்டும் ஒரு சம்பவமாக, சரக்கு ரெயில் நேற்று தடம் புரண்டது.
தடம் புரண்ட ெரயில்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை, கூடல்நகர் ரெயில் நிலையங்களில் ரெயில்கள் தடம் புரளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. நேற்று மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டும் பணிக்காக இயக்கப்படும் சரக்கு ரெயிலானது, நேற்று மாலை கூடல்நகர் ரெயில் நிலைய யார்டு பகுதியில் இருந்து மதுரை நோக்கி வந்தது. திடீரென அந்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
யார்டு பகுதியில்...
அதாவது யார்டு பகுதியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த 2 தண்டவாளங்களுக்கு இடையே ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன. ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவுக்கான இந்த ரெயிலில் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு பெட்டி மட்டும் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதற்கான மீட்பு பணிகள் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகியும் நடந்து கொண்டிருந்தன. மதுரை கோட்டத்தில் தொடர்ந்து ரெயில்கள் தடம் புரளும் சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மதுரை-திண்டுக்கல் ரெயில் பாதையில் இரட்டை அகலப்பாதையாக இருப்பினும், அதிகளவு ரெயில்கள் இயக்கப்படுவதால் பராமரிப்பு பணிகளில் சிக்கல் ஏற்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, சுமார் 120 சதவீதம் ரெயில் போக்குவரத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால் தான், பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள முடிவதில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. இந்த விபத்தால், பயணிகள் ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
விசாரணை
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து வாடிப்பட்டியில் உள்ள டிராக்டர் நிறுவனத்தில் இருந்து டிராக்டர் ஏற்றிச்செல்வதற்காக மதுரை நோக்கி ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த போது தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில் தடம் புரண்டது.
கடந்த மாதம் 20-ந் தேதி அதே போன்ற ரெயில், மதுரை ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பார பகுதிக்குள் வந்த போது, 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.