மாமல்லபுரம் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டுக்காரர் தற்கொலை
தமிழக பெண்ணை மணந்து இந்திய குடியுரிமை பெற்று மாமல்லபுரத்தில் வசித்து வந்த பிரான்ஸ் நாட்டுக்காரர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.;
மாமல்லபுரம்,
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெனால்டு ஜாக்ஜங்கோஸ் (வயது 66). கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் வந்த இவர், இங்குள்ள பல்லவர் கால சிற்பங்களின் அழகில் மயங்கி அதன் பிறகு தன்னுடைய சொந்த நாட்டுக்கு செல்லாமல் மாமல்லபுரத்திலேயே தங்கினார்.
மாமல்லபுரம் ஊர், இங்குள்ள மக்களின் அன்பு, அரவணைப்பு கண்டு பூரிப்படைந்த அவர், வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணை கிறிஸ்வத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தமிழக பெண்ணை திருமணம் செய்து இந்திய குடியுரிமை பெற்ற ரொனால்டு ஜாக்ஜங்கோஸ் மாமல்லபுரத்திலேயே நிரந்தரமாக தங்கி விட்டார்.
ஓட்டல் நடத்தினார்
இவர் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் தேவைக்காக ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா தொற்று காரணமாக பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு பயணிகள் வரத்து குறைந்ததால் அவரது ஓட்டலில் வியாபாரம் முடங்கியதாக தெரிகிறது.
இதனால் கடும் மனஅழுத்த நோய்க்கு ஆளானார். ஒரு கட்டத்தில் மனஅழுத்த நோய் அதிகமானதால் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மனோதத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற்று தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் தினமும் மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று அலையின் அழகை பார்த்து பொழுதை கழிக்கும் பழக்கம் உடைய ரொனால்டு ஜாக்ஜங்கோஸ், வழக்கம் போல் கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்ட அவரது உடல் மாமல்லபுரம் கடற்கரை பகுதியின் வடக்கு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலின் பின்புறம் கரை ஒதுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் ரொனால்டு ஜாக்ஜங்கோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.