இந்து முன்னணி நிர்வாகி காரை பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

இந்து முன்னணி நிர்வாகி காரை பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு;

Update:2022-09-24 00:15 IST

போத்தனூர்

கோவை இந்து முன்னணி நிர்வாகி காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெட்ேரால் ஊற்றி தீ வைப்பு

கோவை மாநகரில் பா.ஜனதா அலுவலகம் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் கடைகளை குறி வைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர். இதனால் மாநகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை வீதியை சேர்ந்தவர் தியாகு (வயது 35). இவர் இந்து முன்னணி செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் வழக்கம் போல் தனது வீட்டிற்கு முன் காரை நிறுத்தி விட்டு வெளியே சென்றிருந்தார்.

அப்போது மதியம் 1.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவர் அந்த கார் அருகே வந்ததும் தனது கையில் ஒரு பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து காரின் மீது ஊற்றினார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அதில் தீ வைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினர்.

கூச்சல்

கார் தீ பற்றி எரிவதை கண்ட தியாகுவின் தாய் சாந்தமணி உடனடியாக வெளியே ஓடி வந்து தீ என்று கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் காருக்கு பெரிய சேதம் எதுவும் இல்லை. தீ வெப்பத்தில் கார் கண்ணாடி மட்டும் உடைந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் கோவை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தியாகுவின் தாய் சாந்தமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து காரில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவை மாநகரில் நேற்று முன்தினம் 3 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், நேற்று பட்டப்பகலில் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்