தனியார் நிறுவன தொழிலாளிக்கு அடி-உதை

பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன தொழிலாளிக்கு அடி-உதை 4 பேர் மீது வழக்கு

Update: 2022-10-25 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் முத்துவேல் லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் அருள்ராஜ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரும் அவரது நண்பர் மதன் என்பவரும் வி.மருதூர் பகுதியில் உள்ள தங்கள் நண்பரை பார்த்துவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். வி.மருதூர் எம்.ஆர்.கே. தெருவில் செல்லும்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த மோகன், நவீன், சிலம்பரசன், பிரவீன் ஆகியோர் நடுரோட்டில நின்றுகொண்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வெடித்த பட்டாசு தீப்பொறி அருள்ராஜின் மீது விழுந்தது. உடனே அவர், மோகன் உள்ளிட்ட 4 பேரிடமும் சென்று ஏன் நடுரோட்டில் பட்டாசு வெடிக்கிறீர்கள் என்றும், ஓரமாக சென்று வெடிக்குமாறும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து அருள்ராஜை திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அருள்ராஜ், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மோகன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்