வேலை வாங்கி தருவதாக செல்போனில் பேசியவரிடம் ரூ.25¼ லட்சத்தை இழந்த குமரி வாலிபர்; டெல்லியை சேர்ந்த ஒருவர் கைது

வேலை வாங்கி தருவதாக செல்போனில் பேசியவரிடம் ரூ.25¼ லட்சத்தை குமரி வாலிபர் இழந்தார். இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-27 18:45 GMT

நாகர்கோவில், 

வேலை வாங்கி தருவதாக செல்போனில் பேசியவரிடம் ரூ.25¼ லட்சத்தை குமரி வாலிபர் இழந்தார். இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பட்டதாரி வாலிபர்

சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2016-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்காக சில இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். இந்த நிலையில் டெல்லியில் செயல்படும் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இருந்து எனது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.

ரூ.25¼ லட்சம் மோசடி

அதில் எதிர்முனையில் பேசிய நபர், டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள சில காலியிடங்கள் இருப்பதாகவும் அந்த வேலைக்கு உங்களை தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி. வரி, கமிஷன் கட்டணம், இயக்குனர் கட்டணம், வருமான வரி கட்டணம் என மொத்தம் ரூ.25 லட்சத்து 27 ஆயிரத்து 700-ஐ கொடுக்க வேண்டும் என கூறினார்.

நானும் அவரது பேச்சை நம்பி பல தவணைகளாக, எனது செல்போனுக்கு அந்த நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.25,27,700-ஐ அனுப்பி வைத்தேன். பின்னர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அது போலியானது என்பதும், என்னிடம் பணமோசடி செய்தததும் தெரியவந்தது. எனவே என்னிடம் பணமோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தனியார் நிறுவன ஊழியர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஏமாற்றப்பட்ட வாலிபரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை ஆய்வு செய்தபோது அது டெல்லியில் இருந்து வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக டெல்லி ராமவிகார் பகுதியை சேர்ந்த ராம்சிங் மகன் ஆகாஷ் (21) என்பவர் பட்டதாரி வாலிபரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்