தேவகோட்டை நகர சிவன் கோவிலில் படியளக்கும் விழா
இறைவன் ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அரிசி பெற்று சென்றனர்.;
படியளக்கும் விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா
தேவகோட்டை நகர் சிவன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி அஷ்டமி தினத்தன்று சிவபெருமான் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை சிவபெருமான், மீனாட்சி அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, பின்னர் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
கோவில் முன் மலர்களால் அலங்காரம் செய்து நிறுத்தப்பட்டிருந்த சப்பரங்களில் உற்சவர்கள் எழுந்தருளினர். பின்னர் இந்த சப்பரங்கள் வட்டாணம் சாலை, பழைய சருகனி ரோடு, தியாகிகள் சாலை, பேருந்து நிலையம் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தன.
அதனைத் தொடர்ந்து கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று சிவபெருமான் சன்னதியில் படியளக்கும் விழா நடைபெற்றது. இறைவன் தங்க படியால் ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அரிசி பெற்று சென்றனர்.