மீண்டும் மும்பை வருவேன்: முடிந்தால்.. உத்தவ் சிவசேனாவுக்கு அண்ணாமலை சவால்
நான் மும்பைக்கு வருவேன், வரத்தான் போகிறேன். முடிந்தால் என் காலை வெட்டுங்கள் பார்ப்போம் என்று அண்ணாமலை பேசினார்.;
மும்பை,
மராட்டியத்தில் வரும் 15 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வெள்ளிக்கிழமை அங்கு பிரசாரம் செய்தார். மேற்கொண்டார். அப்போது, மும்பை மாநகரம் மராட்டியத்திற்கு சொந்தமானது அல்ல என்றும் அது சர்வதேச நகரம் என்றும் பேசி இருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனா, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது: "ராஜ் தாக்கரே போன்றவர்கள் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன். வேலை இல்லாமல் சிலர் அங்கிருந்து என்னை பற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர், மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். என் தாய், தந்தையர் ஆடு மாடு மேய்ப்பவர்கள். அவர்களின் மகனான என்னை மும்பையில் கூட்டம் போட்டு திட்டுகின்றனர்.
ஒரு விவசாயி மகனாகிய என்னை மிரட்டுகின்றனர். யார் மிரட்டினாலும் நான் மும்பை செல்வதை தடுக்க முடியாது. நான் மும்பைக்கு வருவேன், வரத்தான் போகிறேன். முடிந்தால் என் காலை வெட்டுங்கள் பார்ப்போம். இங்க் அடித்துப் பாருங்கள். மிரட்டி, மிரட்டியே வாழ்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை, அதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்” என்றார்.